உலகப் புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் யானைதான் பார்வதி. கடந்த பல மாதங்களாக யானையின் கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாட்டுடன் அவதிப்பட்டு வந்தது.
இதற்காக கால்நடை மருத்துவ வல்லுநர்கள் குழு மூலம் சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. இதன் காரணமாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு யானை வழக்கம்போல் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது.
இந்நிலையில் பார்வதி யானையின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக கோயிலுக்குள் குளியல் தொட்டி அமைக்க அறநிலையத் துறை பரிந்துரை செய்தது. இதனையடுத்து யானை குளித்து விளையாட ஏதுவாக கோயிலுக்குள் குளியல் தொட்டி அமைக்க பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து கோயிலில் தற்போது யானை பராமரிக்கப்பட்டு வரும் யானை மஹால் பகுதியில் குளியல் தொட்டி அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டு இதற்காக ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது குளியல் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.. எதிர்க்கட்சிகள் அமளி.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!