ஆண்டின் 365 நாள்களிலும் திருவிழா கோலம் கலையாத மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தற்போது நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காராத்தில் காட்சியளிக்கும் மீனாட்சியை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தன்னைத்தானே பூஜிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்த அம்மன் இன்று விறகு விற்கும் வேடத்தில் அருள்பாலிக்கிறார்.
விறகு விற்கும் லீலை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது 1965ஆம் ஆண்டு வெளியான திருவிளையாடல் திரைப்படம் தான். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் என்ற புகழ்பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் காலம் கடந்து ஒளிரும் காவியமாகத் திகழ்கிறது. ஏ.பி நாகராஜன் இயக்கிய இத்திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. டி.எம். சௌந்தராஜனின் காந்தக் குரலில் வெளியான 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடல் விறகு விற்ற படலத்தை முத்தமிழிலும் (இயல், இசை, நாடகம்) வெளிப்படுத்தியிருக்கும். அதற்கு விறகு விற்க வந்த சிவாஜியின் நடிப்பும் கச்சிதமாக இருந்ததே ஒரு காரணம்.
விறகு விற்ற படலம்:
மதுரையை வரகுணபாண்டியன் (கி.பி. 800 - 830 ) ஆட்சி செய்த காலத்தில் ஏமநாதன் எனும் புலவர் பாண்டிய நாட்டுக்கு வந்தார். ‘யாழ்’ வாசிப்பதில் வல்லவரான அவர் பாண்டியனின் அரியணையில் தன் யாழை மீட்டினார். யாழிசையில் மயங்கிய பாண்டியன் ஏமநாதனை வியந்து பாராட்டினார். ஏமநாதன் வரகுண பாண்டியனிடம் "தன்னைப் பாட்டில் வென்றால்தான் பாண்டிய நாட்டிற்கு அடிமை என்றும், இல்லையேல் தன் பாட்டிற்குப் பாண்டிய நாடே அடிமை" என ஆணவத்துடன் சவால் விட்டார்.
ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை. எனவே பாண்டிய மன்னன் தனது அரசவையின் ஆஸ்தான வித்துவானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிடுமாறு பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர்களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன், அவர்களை வெல்ல வழி தெரியாமல் சோமசுந்தரரை ( சிவ பெருமானை) வேண்டி நின்றார். அவரது வேண்டுதலுக்கு இணங்க, முதியவர் உருவத்தில் விறகு விற்பவராக வந்த சிவபெருமான் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தார். அங்கு தான் வைத்திருந்த யாழினை வாசித்துக்கொண்டே பாடினார்.