மதுரை:மதுரை மாவட்டம் மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகநீதி காப்போம் என்கிற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமையில் கோ.புதூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொது கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில் 'விசிகவை தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது எனவும், மேலவளவு படுகொலை அரசியல் அறியாமையால் நடந்துள்ளது. வன்முறை உண்டாக்க ஒரு ரவுடி போதும். அமைதியை உண்டாக்க ஒரு தலைவானால் மட்டுமே முடியும் எனக் கூறினார். மேலும் திரௌபதி முர்மு, எல்.முருகன் போன்றவர்கள் பாகன் கையில் இருக்கும் யானை போன்றவர்கள் பாஜக சொல்வதை தான் திரௌபதி முர்மு, எல்.முருகன் செய்வார்கள் எனத் தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் ...:2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் அரசியல் அமைப்பு சட்டத்தில் தான் கை வைப்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நாடு விடுதலைக்கு முன்பு இந்து மகாசபை என்ற இயக்கத்தை வைத்திருந்தார்கள். பெண்கள் பிள்ளைகள் பெறும் இயந்திரமாகவும், ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது.
பின்னர் மெல்ல மெல்ல ஆயுதமில்லா ஆயுதமாக வந்தது தான் அரசியலமைப்பு சட்டம். அரசியலமைப்பு சட்டம் தான் சமூகத்திற்கு கல்வி, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என அனைத்தையும் கொடுத்தது. ராமன் இப்படி தான் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேத காலத்தில் பிராமணர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க முயன்றார்கள்.
உத்தரபிரதேசத்தில் மட்டும்தான் அவர்கள் இருந்தார்கள், ஆயிரம் பேரில் 10 சதவீத பேருக்கு சமஸ்கிருத பெயரை மன்னர்கள் துணையோடு பிராமணர்கள் வைத்தது சதி. பிராமணர்களுக்கு நாடு இல்லை என்பதால் இந்தியாவை ஒரே தேசம் ஒரே கொள்கை என்ற ஹிட்லரின் கொள்கையை பின்பற்றி கோஷம் இடுகின்றனர் என கூறினார்.
2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கிவிட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டம் என்பார்கள், ஒரே தேசம் என்பது ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்காக தான். தற்போது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரித்து விட்டார்கள், 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு நாள் இரவில் மன்கீபாத்தில் பேசும் போது மனுஸ்ருதி் அரசியலமைப்பு சட்டம் என அறிவித்தாலும் அறிவிப்பார் என தெரிவித்தார்.