மதுரை: பீ.பி. குளம், பி.டி. ராஜன் சாலை பகுதியில் வசித்துவரும் மலைராஜன் - தங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஈஸ்வரன் (30). இவர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது தல்லாகுளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு காவலர்கள் ஈஸ்வரனிடம் மது வைத்திருப்பதாக விசாரணை நடத்தி அடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஈஸ்வரன் காவலர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து, ஈஸ்வரன் அமர்ந்திருந்த பகுதியில் நான்கு மதுபாட்டில்களைக் கைப்பற்றியதாகவும் மேலும் கூடுதலாக மதுபாட்டில்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஈஸ்வரனின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
தற்கொலை முயற்சி
ஈஸ்வரனின் தாயார் தங்கம்மாள் செல்போனை பறித்துக்கொண்டதுடன், அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனிடையே காவல் துறையினர் அடித்ததால் தப்பியோடிய ஈஸ்வரன் தல்லாகுளம் காவல் நிலையம் அருகேயுள்ள அம்பேத்கரின் சிலை முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர், பொதுமக்கள் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 விழுக்காடு தீக்காயத்துடன் ஈஸ்வரன் சிகிச்சை பெற்றுவருகிறார்.