மதுரை : மதுரை அருகே ஆனையூரில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகளின் நிலை குறித்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் ஆய்வு நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் ் பேசினார். அப்போது, "தமிழ்நாடு அரசு ஆளுநர் உரையில் சேவைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. தகவல் உரிமை, மனித உரிமை, கல்வி உரிமை, பாதுகாப்பு சட்டங்களை போன்று சேவை உரிமை சட்டமும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இது நிறைவேற்றப்பட்டால் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். இச்சட்டம் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். சாதிச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், விரைவில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கல்வி உரிமைச் சட்டப்படி வரும் புகார்களை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக விசாரித்து வருகிறோம். சில பள்ளிகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி உள்ளோம்.
இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு குடியுரிமை குறித்து நாம் முடிவு செய்ய இயலாது. இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள்கூட எந்த முடிவையும் எடுக்க முடியாது. சர்வதேச குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தின்படி, பிறந்த எந்த குழந்தைக்கும் பிறப்புச் சான்றிதழும் குடியுரிமைச் சான்றிதழ் இருக்க வேண்டும். ஆகையால் இவற்றை எல்லாம் ஆய்வு செய்து அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் வழங்க வேண்டும்.விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை ஆய்வு செய்யவே இந்த பயணம். கரோனா பேரிடர் காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்காணிப்பது இந்த பயணத்தின் நோக்கம்.குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை கடத்தல், பாலியல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து புகார்களையும் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்தப் பயணத் திட்டத்தில் அது போன்ற விவரங்கள் இடம் பெறவில்லை.விபத்துக்களால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தங்களுக்கு உரிய இழப்பீடு பெறுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. இளையோர் நீதி சட்டத்தில் அதற்குரிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. சிறு வயதில் விபத்தால் பெற்றோரை இழந்துள்ள சிறார்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெற்று தரும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் தற்போது அகதிகள் முகாம்களில் வாழும் குழந்தைகளின் சிக்கல்களையும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. அங்குள்ள குழந்தைகளையும் நம் குழந்தைகளாகத் தான் பார்க்க வேண்டும் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அங்குள்ள குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், குடியுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்றுத் தருவதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்பிக்க உள்ளேன்" எனறு டாக்டர் வீ.ராமராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தடுப்பூசி போட்டுக்கொண்டால் விமான கட்டணத்தில் சலுகை!