மதுரையின் வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 1636ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மொத்த அரண்மனையில் நான்கில் ஒரு பாகம் மட்டுமே தற்போது எஞ்சி நிற்கிறது. இந்தோ சாரசானிக் கட்டடக்கலையின் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனையில் மன்னரால் ராஜ பரிபாலனம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
ஆனால் தற்போது புறாக்களும், வவ்வால்களின் எச்சமும் இந்த அரண்மனையின் அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. இதற்காக தமிழ்நாடு தொல்லியல் துறையும், சுற்றுலாத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் கூட அதற்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது.
இவ்வேளையில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியோடு மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது அரண்மனையின் உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் புறாக்கள், வவ்வால்களின் வருகையை தடுக்க மிக பிரம்மாண்டமான முறையில் வலை அமைக்கப்பட்டிருப்பது.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பு பொறியாளரும் தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றுகின்ற வாசுதேவன் கூறுகையில், ”திருமலை மன்னர் அரண்மனையில் சிதிலமடைந்த பகுதிகள், கலசங்களை சீரமைத்தல், தளம் அமைத்தல், வெள்ளையடித்தல், பாரம்பரிய பூச்சு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, அரண்மனையின் திறந்தவெளி முற்றத்திலும், சாளரங்கள், கதவுகளில் வலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
புறாக்கள், வவ்வால்களால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக நைலான் இழைகள் மூலமாக வலையமைக்கும் பணியும் நடைபெறுகிறது. அரண்மனையின் நடுமுற்றத்தில் மிகப்பிரமாண்டமாக இந்த வலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எவ்வித இடையூறுமின்றி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில், வலை இருப்பது போன்றே தெரியாத வகையில் மிக நேர்த்தியாக இந்த வலை அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே வலையமைத்து தொல்லியல் சின்னம் பராமரிக்கப்படுவது இது முதல் முறையாகும். இந்த வலை சுமார் பத்தாண்டு காலம் உழைக்கக் கூடியதாகும்” என்கிறார்.
இந்த அரண்மனையின் உயரம் 58 அடி ஆகும். மொத்தம் 248 தூண்கள் கொண்ட இந்த அரண்மனை 1971ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, அப்போதிருந்து தமிழ்நாடு தொல்லியல் துறையால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாநில சுற்றுலா துறையின் சார்பாக ஒவ்வொரு நாளும் ஒலி, ஒளி காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.