மதுரை சின்ன அனுப்பானடியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், "மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் சாலையில் உள்ளது. அதன் கலைத் தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு புறங்களிலும் வணிக நோக்கில் கட்டுமானங்கள் உள்ளன. இதனால் நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளத்தில் குப்பை குவிக்கப்படுகிறது. கழிவுநீர் கலக்கிறது.
இவ்விவகாரத்தை உயர் நீதிமன்றம் 2011இல் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன்பேரில், தெப்பக்குளத்தைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை.
தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் 2019இல் சில கடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. அறநிலையத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். குப்பை குவிப்பது, கழிவுநீர் கலப்பதைத் தடுத்து தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.