மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள பதினெட்டான்குடி கிராமத்தைச்சேர்ந்த மாணவர், லோகேஷ்வர். சிவக்குமார்-தவமணி ஆகியோரின் புதல்வரான இவர், 12ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர். தொடர்ந்து, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பாக அவருக்கு தேர்வு அனுமதிச் சீட்டு (Hall Ticket) அனுப்பப்பட்டிருந்தது. அந்த அனுமதிச்சீட்டில் லோகேஷ்வருக்கான தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த மாணவர் லோகேஷ்வர், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை தொடர்பு கொண்டு, தேர்வு மையத்தை மாற்றுவதற்கு உதவி கோரியிருந்தார்.
இதனையடுத்து, சு.வெங்கடேசன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தேசிய தேர்வு முகமை, மாணவர் லோகேஷ்வருக்கு மதுரை கீழக்குயில்குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து, இன்று (ஆக. 30) பிற்பகல் லோகேஷ்வர் தேர்வு எழுதினார்.