பதக்கங்களாலும் கோப்பைகளாலும் தன் வீட்டையே நிறைத்துள்ளார் மாணவர் சாம் ஜார்ஜ் சஜன். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டு, அதற்காக தொடர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். சாம் ஜார்ஜ்ஜின் தந்தை கிறிஸ்டோபர் ரமேஷ் மேலூரிலுள்ள அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் என்சிசி ஆசிரியராகவும் இருக்கின்ற காரணத்தால், சாம் ஜார்ஜுக்கும் அந்தப் பயிற்சியைக் கொடுத்துள்ளார்.
தன்னுடைய துப்பாக்கி சுடும் ஆர்வத்திற்கு பெரும் ஊக்கமாகத் திகழ்ந்தது தனது தந்தையார்தான் எனக் கூறும் சாம், தற்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறையில் பயின்று வருகிறார். அண்மையில் போபாலில் நடைபெற்ற 63ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் தூர துப்பாக்கிச் சுடுதலில் தனி நபர் பிரிவில் பங்கேற்ற இவர் வெள்ளியும், தமிழ்நாடு அணியின் சார்பாக வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், 'மதுரை ரைஃபிள் கிளப் மூலமாக கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்துதான் துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் கொண்டு இறங்கினேன். பொழுது போக்கு நிமித்தமாகவே இதில் ஆர்வம் காட்டினேன். சொந்தமாக என்னிடம் துப்பாக்கி இல்லாமல் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். தங்கப் பதக்கங்கள் வென்றதுடன் மண்டல அளவிலும் சாதனை புரிந்தேன். கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்' என்கிறார்.
தனக்கென்று சொந்தமாய் துப்பாக்கியை பல்வேறு போராட்டங்களுக்கிடையே பெற்று தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதாகவும், இதன் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்றதாகவும் பெருமையோடு கூறுகிறார் சாம் ஜார்ஜ். அதே ஆண்டில் ஜெர்மனியிலும், செக் குடியரசிலும், தென் கொரியாவிலும் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்று தென்கொரியாவில் நடைபெற்ற போட்டிகளில் நான்கு தங்கமும், நான்கு வெள்ளியும் வென்றதாகவும் கூறும் இவரின் முகத்தில் அந்த வெற்றியை அடைய முயற்சித்த ஆர்வமும் வெளிப்படுகிறது.