மதுரை:ஆண்களால் சாதிக்க முடிந்த எதையும் பெண்களும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை உணர்த்தவே உலகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்று சொல்லும் இந்த பள்ளி குழந்தைகள் ஆணுக்குப் பெண் சமம் என்பது தவறு ஆணும் பெண்ணும் சமம் என்பது தான் சரி என்று வகுப்பு எடுக்கின்றனர். இந்த மாணவர்களின் ஆசிரியர் சுலைஹா பானு பள்ளிக் குழந்தைகளின் பங்கேற்பின் வாயிலாக ஆண் பெண் சமத்துவத்தைப்போதித்து வருகிறார்.
மதுரை விராட்டிபத்து அருகே உள்ள முத்துத்தேவர் காலணியில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளின் மூலமாக அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு சிறு நாடகத்தின் வழியே ஆண் பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் குழந்தைகளின் கேள்விகளுக்கும் குழந்தைகளைக்கொண்டே பதிலளிக்கிறார்.
நாடகத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரம், அதில் பாத்திரமாக நிகழ்த்தும் குழந்தைகளுக்குள் அந்த உணர்வை முழுவதுமாக ஏற்படுத்தவும் முடிகிறது, என்கிறார் ஆசிரியர் சுலைஹா பானு. கணீரென்ற குரலில் மாணவிகளின் தெருக்கூத்து, காண்போரை வியக்க வைக்கிறது.
ஆணும் பெண்ணும் சமம்
7-ஆம் வகுப்பு பயிலும் கிஷோர் குமார் என்ற மாணவர் கூறுகையில், ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்லக்கூடாது. ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் சரியான பார்வை.பெண்களுக்குக்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிக ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆணும் பெண்ணும் எப்போதும் சமம்தான்' என்கிறார்.
9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுவாதி கூறுகையில், 'ஆண்களால் செய்ய முடிந்த எதுவும் பெண்களாலும் செய்ய முடியும். சிலம்பம், ஜூடோ,ஹேண்ட்பால் போன்றவற்றில் பயிற்சி மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்கிறேன். ஆணும், பெண்ணும் தனித்தனியாக இல்லை என்பதே எனது கருத்து' என்கிறார்.