மதுரை:பத்திரிகை புகைப்பட கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக, "உலக பத்திரிகை புகைப்பட அறக்கட்டளை" எனும் அமைப்பு, ஆண்டுதோறும் "World Press Photo Awards" என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருதுக்கு, 130 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 66 புகைப்படக் கலைஞர்கள், 64 ஆயிரத்து 823 படைப்புகளை அனுப்பியிருந்தனர்.
புகைப்படக்கலைஞர்களின் படைப்புகள் அனைத்தும் பருவநிலை மாற்றங்கள், மக்கள் உரிமை போராட்டங்கள், மறுக்கப்படும் கல்வி, பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாத்தல் என்பன போன்ற கருத்தமைவில் அமைந்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் உலக பத்திரிகை புகைப்பட அறக்கட்டளை, பிராந்திய அளவில் இந்த விருதுக்கு தேர்வான 24 புகைப்பட கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் 4 பிரிவில் புகைப்படக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள மதுரையைச் சேர்ந்த செந்தில்குமரன் ஆவணப்பட புகைப்படக் கலைஞராகவும், தேசிய புவியியல் ஆய்வாளராகவும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக மனித-விலங்கு மோதலைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி வருகிறார். மனிதன்-புலி மோதல்கள் குறித்து தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார்.
மனித-விலங்கு மோதலை முன்னிலைப்படுத்தும் புகைப்படங்கள்
புலி பாதுகாப்பு மற்றும் புலிகள் காப்பகங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மட்டுமன்றி, தற்போது, தென்னிந்தியாவில் மனிதர்-யானை சகவாழ்வு பிரச்சினைகள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.