தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு விழா காணும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் - ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் 135 ஆண்டுகள் நிறைவு

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பெரியார் பேருந்து நிலையத்தை மூன்றாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8) திறந்துவைக்கிறார். தற்போது, மிக நவீன வசதிகளோடு மதுரை மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.

Madurai Periyar bus stand reopening by cm stalin, டிசம்பர் 8ஆம் தேதி மதுரை பெரியார் பேருந்து நிலையம் திறப்பு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை திறந்துவைக்கும் மு.க. ஸ்டாலின், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம், புதிய பெரியார் பேருந்து நிலையம்
Madurai Periyar Bus stand reopening on dec 8

By

Published : Dec 8, 2021, 9:44 AM IST

மதுரை: மதுரையின் பல்வேறு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டது. சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற திட்டத்தின்கீழ் ரூ.167 கோடி செலவில் மிக நவீனமான முறையில் கட்டப்பட்டுவந்தது.

அப்போது, துணை முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாகத் திறந்துவைக்கிறார்.

100 ஆண்டுகள் பழமை

மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரியார் பேருந்து நிலையம், இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே செயல்பட்டுவருகிறது. சற்றே ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததுடன், முன்பு சென்ட்ரல் பேருந்து நிலையம் என அழைக்கப்பட்டுவந்தது. கடந்த 1971ஆம் ஆண்டு முதல் பெரியார் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம்கண்டது.

ஒரு காலத்தில் தற்போதைய பெரியார் பேருந்து நிலையம், மதுரை சந்திப்பு ஆகிய பகுதிகள் மிகப்பெரிய நீர்நிலையாக இருந்தது. 'வலை வீசித் தெப்பம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மதுரையின் மக்கள் தொகை, போக்குவரத்தைக் கருத்தில்கொண்டு இங்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பிறகு மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்தது பெரியார் பேருந்து நிலையமே.

மூன்றடுக்குப் பேருந்து நிலையம்

மத்திய அரசின் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மதுரை மாநகரில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பெரியார் பேருந்து நிலையம் 167.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 30 ஆயிரத்து 500 சதுரஅடியில், மூன்றடுக்குப் பேருந்து நிலையமாக அமைகிறது. 58 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்த வசதிப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் அடித்தளத்தில் 200 கடைகளும், 260 நான்கு சக்கர வாகனங்களும்; இரண்டாவது அடித்தளத்தில் நான்காயிரத்து 269 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி உள்ளது. ஏடிஎம், அஞ்சலகம், பயணச்சீட்டு பதிவு அலுவலகம் எனப் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நாள்

பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணியின் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் நிலவிய போக்குவரத்து நெரிசல், தற்போது முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியார் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்திலும் காவல் துறை மாற்றம் செய்துள்ளது. இனி, ஒரே இடத்திலிருந்து மக்கள் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதுரையின் மற்றொரு அடையாளமாகத் திகழும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் 136ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இதே நாளில் மிக நவீன வசதிகளோடு பெரியார் பேருந்து நிலையம் திறக்கப்படுவது எதிர்பாராத வரலாற்றுப் பொருத்தமாகும்.

இதையும் படிங்க: மீன் விற்கும் தாய்க்கு நடந்த அவமரியாதை: ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details