மதுரை:மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
கரோனாவின் சமூகப்பரவலைத் தடுத்திட ஊரடங்கிற்குள் ஊரடங்கை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு நாள்களில் மதுரை மாவட்ட இளைஞர்கள் முழுநாளும் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும்.
வீட்டுக்குள்ளேயே இருக்கும் இந்த அரிய நேரத்தை கலை இலக்கியப் படைப்புகளுக்கான ஆக்கப்பூர்வமான நேரமாக மாற்றும் நோக்கத்தோடு கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை அறிவிக்கிறோம்.
போட்டிகள்:-
- கரோனா குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியைத் தயாரித்தல். “சமூக இடைவெளி என்பது சமூக விலக்கு அல்ல, களங்கம் கரோனாவை விடக் கொடியது, நான் வைரஸ் அல்ல – வைரஸை வென்ற மனிதன், மனிதம் வளர்ப்போம் கோவிட்டை முறிப்போம்” ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் சுவரொட்டி இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சுவரொட்டிகளை உருவாக்கலாம். அச்சுவரொட்டிகளை mpmaduraiposter@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
- மதுரையின் வரலாற்றுச் சின்னங்களைச் சித்தரிக்கும் கோட்டோவியங்களும் பென்சில் ஓவியங்களும் வரைதல். ஓவியங்களைப் புகைப்படம் எடுத்து mpmaduraiart@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
- தற்போதய சமூகச்சூழலை பிரதிபலிக்கும்விதமாக யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வோடு மீம்ஸ் உருவாக்குதல். அதனை mpmaduraimemes@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
- தேவையற்றதெனக் கழிக்கப்பட்ட பொருள்களிலிருந்து கலைப்பொருள்களை மீளுருவாக்குதல் (Art from waste). அதனைப் படமெடுத்து mpmaduraiafw@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஒரு பக்கத்துக்கு மிகாமல் கவிதை எழுதுதல். கவிதைகளை mpmaduraipoem@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மொழிக்கவிதைக்கும் தனித்தனியே பரிசுகள் உண்டு.
- வீட்டையும் வீட்டின் சுற்றுப்புறத்தையும் கலைவண்ணம் மிளிர புகைப்படம் பிடித்தல். அதனை mpmaduraiphoto@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- தமிழிலோ, ஆங்கிலத்திலோ மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதை எழுதுதல். சிறுகதைகளை mpmaduraistory@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மொழிக்கதைக்கும் தனித்தனியே பரிசுகள் உண்டு.
- குறும்படமோ அனிமேசன் படமோ உருவாக்குதல். மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் உருவாக்கப்பட்ட படத்தை mpmaduraishortfilm@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- தனிக்குரல் நகைச்சுவையை (Stand-up comedy) உருவாக்குதல். மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் உருவாக்கப்படும் நகைச்சுவையை வீடியோவாக mpmaduraistandup@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- கரோனாவுக்குப் பின் வீடும் நாடும், கரோனா ஒழிப்பில் மரபும் அறிவியலும், இயற்கையைப் பேணும் இனிய கனவு, இனிவரும் நாள்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் மூன்று நிமிடத்திற்கு உரைநிகழ்த்தும் பேச்சு எங்கள் மூச்சு. அதனை வீடியோவாகப் பதிவுசெய்து mpmaduraispeech@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
விதிகள்:
- மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும்.
- ஒருவர் எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
- படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், கற்கும்துறை, பயிலும் ஆண்டு, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தவறாது குறிப்பிட வேண்டும்.
- இவ்வாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி முதல் ஆண்டு என்ற அடிப்படையில் போட்டியில் கலந்துகொள்ளலாம். அவர்கள் கல்லூரி விபரத்துக்கு பதில் வீட்டு முகவரியையும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
- படைப்புகளை அனுப்ப இறுதிநாள் மே 5ஆம் தேதி
பரிசுகள்:
- ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு படைப்புகளை பரிசுக்குரியனவாக நடுவர்குழுவினர் தேர்வு செய்வர். அவர்களின் முடிவே இறுதியானது.
- தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு படைப்புக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் ஐந்தாயிரமும், ரூபாய் ஐந்தாயிரத்துக்கான பரிசுக்கூப்பனும் வழங்கப்படும்.
- பரிசுத்தொகையை அபராஜிதா நிறுவனமும் பரிசுக்கூப்பனை போத்தீஸ் நிறுவனமும் வழங்குகின்றன.
- வெற்றிபெற்றவர்களின் விபரத்தை திரைக்கலைஞர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார்.
போட்டி மனோநிலையோ, பரிசுத்தொகையோ முக்கியமல்ல. வீட்டுக்குள் கட்டுண்டிருக்கும் இந்த நாள்களை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குவதற்கான முயற்சியே இது எனக் குறிப்பிட்டுள்ளார்.