தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா நாள்களில் இப்படியும் கொடுமையா? - பள்ளிக்கல்வித்துறைக்கு சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்

கரோனா நோய்க் கிருமித் தொற்று தீவிரமாகி உள்ள நிலையிலும் இணையம் வாயிலாகக் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

su venkatesan latest speech
su venkatesan latest speech

By

Published : Apr 17, 2020, 6:33 PM IST

மதுரை: கரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ள நிலையிலும் இணையம் வாயிலாகக் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உலகத்திலேயே பள்ளிக்கல்வியில் முதலிடத்தில் இருக்கும் நாடு பின்லாந்து. அங்கே தனியார் பள்ளிகளே கிடையாது. எந்த ஊருக்குக் குடும்பம் மாறிப்போனாலும் அந்த ஊரில் உள்ள அரசுப்பள்ளி ஒரே தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைவிட மிகமுக்கியமான காரணமாக பின்லாந்தின் கல்வியாளர்கள் கூறுவது என்னவென்றால் பள்ளிக்கல்வியில் நாங்கள் சிறந்து விளங்க முதன்மையான காரணம் மிகக்குறைந்த நேரமே குழந்தைகள் பள்ளியில் இருக்கிறார்கள் என்பதுதான் என்கிறார்கள்.

குறைவான பள்ளி நேரம் (LESSER SCHOOL HOURS) என்பதுதான் தாரக மந்திரம். குழந்தைகள் குழந்தைகளாக வாழ நாம் நேரம் தர வேண்டும். குழந்தை தன்மையை அவர்கள் ஆனந்தமாக அனுபவிக்க நாம் அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கூடமே ஓரிரு மணிநேரம்தான் என்பதால், அந்நாட்டில் வீட்டுப்பாடம் என்பது அறவே கிடையாது. வீட்டில் குழந்தைகள் அவர்களாகவே வாழ வேண்டும் என்பதால், பள்ளிக்கூடத்தை எந்நேரமும் தலையில் தூக்கித்திரியும் அவலம் அங்கு இல்லை.

இந்தியாவில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது. மூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை வாரத்திற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம். நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு மணி நேரமும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரமும் வீட்டுப்பாடம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசின் பாடத்திட்டக்கொள்கை பரிந்துரைக்கிறது.

தமிழ்நாட்டில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவுபோட்டும், அதனை கண்டும் கேளாமலிருக்கும் பள்ளியினரும் பெற்றோரும் ஏராளமாய் உள்ளனர். அவ்வளவு அக்கறையாம் பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீது. இவற்றையெல்லாம்விடக் கொடுமை இந்தக் கரோனா நாள்களில் யுகேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரைப் பயிலும் குழந்தைகளுக்கு இணையத்தின் மூலம் சில தனியார் பள்ளிகள் பாடம் நடத்துகின்றனர்; வீட்டுப்பாடம் கொடுக்கின்றனர்; பிள்ளைகள் ஜூமில் பாடம் கேட்கின்றனர்; வாட்சாப்பில் பதில் அனுப்புகின்றனர்.

யுகேஜி குழந்தைகளை ‘சீனியர் மோஸ்ட்’ என்று பள்ளிகள் கருதுகின்றனர். எல்கேஜியுடன் ஒப்பிட்டால் அவர்கள் சீனியர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஐந்து வயதைக்கூட கடக்காத குழந்தைகள் என்பதை மறந்துவிடுகிறார்கள். குழந்தைகள் சதாசர்வகாலமும் தம்மைச்சுற்றி நடப்பவனவற்றையெல்லாம் உற்றுநோக்கிக் கற்றுக்கொண்டே இருப்பார்கள்.

அதுதான் கல்வி. அவர்களாகக் கற்றுக்கொள்ளும் நிகழ்வுப்போக்கை அனுமதிக்காமல் குறுக்கீடு செய்யும் இடையூறுகளாகப் பள்ளிகள் ஆகிவிடக்கூடாது. இந்தப் பருவத்தில் சிறிய துடுப்பசைவுகளை நிகழ்த்தும் அளவுக்குத்தான் பள்ளிகளின் உதவி இருக்க வேண்டும்.” என்றார். எனவே இதில் பள்ளிக்கல்வித்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details