தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை ஐஐடியில் இடஒதுக்கீடு மீறல் - எம்பி சு வெங்கடேசன் கேள்வி

சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50 சதவீத ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஐஐடியில் இடஒதுக்கீடு மீறல் - எம்பி சு வெங்கடேசன் கேள்வி
சென்னை ஐஐடியில் இடஒதுக்கீடு மீறல் - எம்பி சு வெங்கடேசன் கேள்வி

By

Published : Jun 5, 2022, 7:54 AM IST

மதுரை:சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50 சதவீத ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள் குறித்து சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நேற்று (ஜூன் 4) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஐ.ஐ.டி நடத்திய ஆசிரியர் இட ஒதுக்கீடு காலியிடங்களுக்கான "இலக்கு இடப்பட்ட சிறப்பு நியமனத் தேர்வு" முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

மொத்தம் அறிவிக்கப்பட்ட 49 காலியிடங்களில் 23 இடங்களே நிரப்பப்பட்டு உள்ளன. மீதம் 26 இடங்கள் "யாரும் தகுதி பெறவில்லை" என்ற காரணம் காட்டப்பட்டு நிரப்பப்படவில்லை. நான் தொடர்ந்து மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் இட ஒதுக்கீடு சட்டம் 2019 மீறப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் கடிதங்கள் எழுதியும் வருகிறேன்.

கடந்த 21.03.2022 அன்று கூட திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் நிலுவைக் காலியிடங்கள் "யாரும் தகுதி பெறவில்லை" "போதுமான விண்ணப்பங்கள் வரப் பெறவில்லை" என்ற காரணங்களால் நிரப்பப்படுவதில்லை என்பதை சுட்டிக் காட்டி இருந்தேன்.

அரசாங்கமோ மத்திய கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றவை என்ற வழமையான காரணங்களையே பதிலாக தந்து தலையிடவில்லை. தன்னாட்சி என்றால் இந்திய அரசியல் சாசனத்திற்கும் மேலானவர்களா என்று கூட கேட்டு இருந்தேன். என்னைப் போன்றவர்களின் குரல் எழுப்பிய நிர்ப்பந்தத்தால் கடந்த செப்டம்பர் 2021இல் ஓராண்டு காலக் கெடுவோடு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் இட ஒதுக்கீடு காலியிடங்களுக்கான "இலக்கு இடப்பட்ட சிறப்பு நியமனத் தேர்வுகளிலும்" இதே அநீதி கூடாது என்பதற்கே ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தேன்.

ஆனால் ஒன்றிய அரசின் கை கழுவல், இட ஒதுக்கீடு மீறலுக்கான துணிச்சலை மத்திய கல்வி நிறுவனங்களுக்கு தந்துள்ளது என்றே சென்னை ஐ ஐ டி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுமையும் நிறைய ஐஐடி களில் இதே நிலைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத், ரூர்கி ஐ ஐ டி களில் உரிய காலக் கெடுவுக்குள் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான முனைப்பு இல்லை என்று அறிகிறேன். டெல்லி ஐஐடி யில் 12 துறை ஆசிரியர் நியமனங்களுக்கு 57 விண்ணப்பங்கள் பட்டியல் சாதியினர் இடம் இருந்து வந்தும் ஒருவர் கூட நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை என்றும் அறிய வருகிறேன்.

இன்று நான் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

  • இலக்கு இடப்பட்ட பணி நியமனங்கள் நடந்தேறி உள்ள விதம் பற்றி சமூக நீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர் குழு ஒன்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • எவ்வளவு விண்ணப்பங்கள் ஓ. பி.சி, எஸ் சி, எஸ் டி பிரிவினர் இடமிருந்து ஒவ்வொரு துறை ஆசிரியர் பணியிடங்களுக்கும் வரப்பட்டது , எவ்வளவு பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்கள், எவ்வளவு பேர் தேர்வு பெற்றார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும
  • ஒவ்வொரு மத்திய பல்கலைக் கழகத்தில் உள்ள ரோஸ்டர்களை - ஓ. பி.சி, எஸ் சி, எஸ் டி நிலுவை காலியிடங்களின் விவரங்களோடு - பொது வெளியில் மக்கள் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.
  • இட ஒதுக்கீடு இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுகிற ராம் கோபால் ராவ் அறிக்கையை பிற்காலத்தில் நியாயப்படுத்தவே இப்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என்ற ஐயம் எழுவதால், இலக்கிடப்பட்ட நியமனங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு இலக்குகள் எட்டும் வரை தொடர வேண்டும்.
  • உதவிப் பேராசிரியர் பணியிடம் மட்டுமின்றி அனைத்து ஆசிரியர் பணியிடங்களிலும் ஒ. பி.சி, எஸ் சி, எஸ்.டி இட ஒதுக்கீடு அமலாவதை உறுதி செய்ய வேண்டும். இராம் கோபால் ராவ் குழு அறிக்கையை எதிர்ப்பின் காரணமாக ஏற்பதாக அறிவிக்கா விட்டாலும் மறைமுகமாக அமலாகிறதோ என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஸ்டாலின் கேட்ட கேள்வியால் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கிய ஒன்றிய அரசு - சட்டப்பேரவை உறுப்பினர் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details