மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா இன்று(ஜன.28) கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயில் தெப்பத்தில் ஆண்டுதோறும் ஜனவரி தைப்பூச பெளர்ணமியன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தெப்பத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து சுவாமியும், அம்மனும் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று(ஜன.28 நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயில் வந்தடைந்தனர்.