மதுரை: அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், வைகை ஆற்றில் இறங்கவும் மதுரைக்கு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.
இதற்காக அழகர் கோவிலில் இருந்து நேற்று (ஏப்.14) மாலை கொண்டப்பநாயக்கர் மண்டபத்துக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில்முன்பு கள்ளழகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தப்பட்டு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அதிர்வேட்டு முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.