மதுரை: மதுரை மாவட்டம் நாகமலை அருகே அமைந்துள்ளது கீழக்குயில்குடி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது சுக்குரு தேவன் காளை சிலை. இவ்வூரைச் சேர்ந்த சின்னப்புலி வகையறாவில் வந்த சுக்குரு தேவர் என்பவர் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய இந்த காளையின் நினைவாக சுக்கிரு தேவர் பரம்பரையை சேர்ந்த குடும்பத்தார் சிலை அமைத்து வணங்கி வருகின்றனர். புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1) 2022ஆம் ஆண்டை வரவேற்கும் வண்ணம் காளையின் சிலைக்கு அலங்காரம் செய்து பூ, பழம் உள்ளிட்ட பொருள்களோடு ஊர் மக்கள் அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர்.
காளை சிலைகள்
இதுகுறித்து, ஊர் பொதுமக்கள் கூறுகையில், "அந்தக் காலத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுக்குரு தேவன் காளை பங்கேற்று வெற்றிகளை ஈட்டியது. இதன் காரணமாக, எங்கள் ஊரும் பெயர் பெற்று விளங்கியது. இறந்த அந்த காளையின் நினைவாக சிலை வைத்து வணங்கி வருகிறோம்.
சுக்குரு தேவன் காளை சிலைக்கு வழிபாடு செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் சிறப்பு வழிபாட்டுடன் ஊரில் நடைபெறும். நல்லது, கெட்டது நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் இந்த காளையின் சிலை முன்பாக நின்று உத்தரவு பெற்று செல்வது வழக்கம். அதேபோன்று, எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களின்ன் கபடி குழுவும் போட்டிகளுக்கு செல்வதற்கு முன் காளையை வணங்கிவிட்டு தான் செல்வர். வெற்றிபெற்ற கோப்பைகளையும் இங்கு வைத்து அந்த இளைஞர்கள் வழிபடுவர்.
அதுமட்டுமன்றி ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று சுக்குரு தேவன் காளையின் சிலைக்கு விழா எடுத்து மகிழ்கிறோம். இந்த ஆண்டும் மிக சிறப்பாக விழா கொண்டாடுவோம்" என்றனர்.
காளையின் சிலையை வணங்கி புத்தாண்டை வரவேற்ற கீழகுயில்குடி மக்கள் இதையும் படிங்க: புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அலங்காரம்