தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2020, 9:07 PM IST

ETV Bharat / city

கரோனா நிவாரணத் தொகை வழக்கு - விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை: கரோனா நிவாரணத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரிய வழக்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai HC, Chennai Branch
Madurai HC, Chennai BranchMadurai HC, Chennai Branch

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரியா என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், “ விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவராக உள்ளேன். அம்மாவட்டத்தை பொருத்தவரை கட்டுமான தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகள், நூற்பாலைகள், அச்சகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களே அதிகமாக உள்ளனர்.

நோய் பரவலை தடுக்கும் விதமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இது போதுமானது அல்ல. அனைத்துக் குடும்பத்திலும் குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கான செலவுகள் அதிகமாக உள்ளன.

அதேசமயம் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை துறையின் செயலாளர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details