மதுரை: மேலூரைச் சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, நடிகர் தனுஷ் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக, நான் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 6 வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறியும் விதமாக, கீழமை நீதிமன்றம் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பியது.
ஆனால் அதன் முடிவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் நீதித்துறை நடுவர் வழக்கைத் தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனறும், மீண்டும் வழக்கை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு