தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கலப்புத் திருமணம் திட்டத்தின்கீழ் உடனடியாக சலுகை வழங்க உத்தரவு - உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

மதுரை: டாக்டர் அம்பேத்கர் சமூக கலப்புத் திருமணம் திட்டத்தின்கீழ் சலுகை வழங்கக் கோரிய வழக்கில், விரைந்து செயல்படுத்துமாறு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளைொ
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Oct 12, 2020, 4:32 PM IST

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "2016ஆம் ஆண்டு எனக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த வனிதா என்கிற பெண்ணுக்கும் கலப்புத் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணம் சங்கரன்கோயில் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டது. கலப்புத் திருமணம் சான்றிதழும் பெற்றுள்ளோம்.

டாக்டர் அம்பேத்கர் சமூக கலப்புத் திருமணம் திட்டத்தின்கீழ் சலுகை பெற இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி 2018ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை.

எனவே எங்களுக்கு உரிய சலுகை வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மனுதாரரின் விண்ணப்பம் நான்கு வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டாக்டர் அம்பேத்கர் சமூக கலப்புத் திருமணம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சலுகையான இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details