ராயப்பன்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தேனி மாவட்டம் சுருளி தீர்த்தத்தில் ஆதி அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அமைந்துள்ள 500 அடி சிவலிங்கத்தை கடந்த 50 ஆண்டுகளாக பேச்சியப்பன் என்பவர் பராமரித்து வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பக்தர்களின் பங்களிப்போடு கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோயில் மேற்குப் புறத்தில் உள்ள கோயில் நிலத்தை பழனிவேலு என்பவர் தனக்கு சொந்தம் எனக் கூறி அபகரிக்க முயன்றார்.
சில நாள்களுக்கு முன்பு பழனிவேலுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை பொறியாளர் ஜேசிபி இயந்திரங்களை வைத்து கோயில் சுற்றுச்சுவரை இடித்து விட்டனர். கோயிலை அபகரிக்க துணைபோகும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க; நாராயணசாமி தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்' - ரங்கசாமி வலியுறுத்தல்