திருவிடைமருதூர், மேலையூரை சேர்ந்த செல்வகுருநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பொதுவாகக் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணி செய்யும் கிராமத்திலேயேதான் தங்க வேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால், மேலையூர் வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர், இதற்கு முரணாகத் தான் பணி செய்யும் இடத்திலிருந்து வெகு தொலைவில் தங்கி தினமும் வந்து செல்கிறார். பொறுப்பற்றத்தனமாகக் காலை 11 மணியளவில் அலுவலகம் வந்துவிட்டு, பகல் ஒரு மணியளவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்வதாகக் கூறிவிட்டு தான் தங்கும் இடத்திற்குச் சென்று விடுகிறார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தனது சொந்த மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு, திங்கட்கிழமை மதியம்தான் மீண்டும் பணிக்குத் திரும்புகிறார். இந்நிலையில் மானிய விலையில் விவசாயத்திற்கான மின் மோட்டார் வாங்குவதற்கான தகுதிச் சான்றிதழ் பெறக் கிராம நிர்வாக அலுவலரை அணுக சென்றபோது, அலுவலகம் பூட்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் என்னால் அம்மானிய விலையிலான மோட்டாரை பெற முடியவில்லை. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த மார்ச் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தேன்.