தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகத் துறைத் தலைவர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகை 18 லட்சமாக இருந்து வருகிறது. மாவட்டத்தை நம்பி 16 மாவட்டங்கள் உள்ளன.
மதுரை விமான நிலையம், இந்தியாவில் 32ஆவது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது. இங்கிருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளுக்கு விமான சேவை நடைபெற்றுவருகிறது.
மதுரை விமான நிலைய ஓடுதளத்தை 7 ஆயிரத்து 500 அடியிலிருந்து 12 ஆயிரம் அடியாக விரிவாக்கம் செய்ய 12 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் ஓடுதள விரிவாக்கம் செய்யும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இது மதுரையிலிருந்து, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்கள் வழியாக கேரள மாநிலத்திற்குச் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாக இருந்துவருகிறது.
இதனால் அப்பகுதியில் வாரணாசி விமான நிலையம் போல் விமான ஓடுதளம் மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் அதன் பின்பு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேபோல் மதுரை விமான நிலையத்தில் இருந்து 80 விழுக்காடு ஏற்றுமதி விவசாயம் சார்ந்த பொருள்களாகவே இருந்துவருகிறது. இதற்காக மதுரை விமான நிலையத்தில் தனியாக குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கக்கோரி மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் பணிகளை மேற்கொள்ளவும் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதி உருவாக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் விமான நிலையம் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்திய விமான நிலைய இயக்குனரகம் முடிவு எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.