மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ” இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். பதக்கம் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ரொக்கப்பரிசாக மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது.
பொதுவாக, ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம்வரை விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாநில அரசோ ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வழங்குகிறது. ஆனால், அனைத்து வித வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை.
ஹரியானா மாநில அரசு சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களை அங்கீகரித்து, வேலை வாய்ப்பு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் தமிழகத்திலும், சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க உத்தரவிட வேண்டும் “ என்று கோரியிருந்தார்.