மதுரை:தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள், படிமங்களை மைசூருவிலிருந்து தமிழ்நாட்டிற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டால், உள்கட்ட வசதிகளை அரசு செய்து தருமா? என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், “இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துகள், மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவருகின்றன. அராபிக், பெர்சியன் கலாசார சின்னங்கள் நாக்பூரில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சமஸ்கிருதம், திராவிட பாரம்பரியச் சின்னங்கள், மைசூருவிலுள்ள மையத்திலும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்து கண்டறியப்பட்ட தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், தமிழ்ப் படிமங்கள் போன்றவை தற்போது மைசூருவில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பகுதியிலிருந்து திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும் இந்த அரியவகை பொருள்கள் ஏற்கனவே ஊட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டுவந்தது. தற்போது இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு மாற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.
நமது பழங்காலத் தொன்மையான நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவும் இந்த அரியவகைப் பொருள்கள் கர்நாடக மாநிலத்தில் வைக்கப்படும்போது முறையாகப் பராமரிக்கப்படாமல் அவை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் மாற்றி பராமரிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.