தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமெரிக்காவில் உள்ள மணமகனுடன் வீடியோ காலில் திருமணம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் உள்ள மணமகளுக்கும், அமெரிக்கவில் உள்ள மணமகனுக்கும் வீடியோ காலில் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jul 30, 2022, 3:07 PM IST

மதுரை:கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வம்சி சுதர்ஷினி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவை சேர்ந்த ராகுல் எல் மது, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இவரும் நானும் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.

இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். நாங்கள் இருவரும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள். இங்குள்ள சிறப்பு திருமணச்சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றுள்ளோம். இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தோம். இதன் பின் நாங்கள் இருவரும் திருமண பதிவு அலுவலர் முன்பு நேரில் ஆஜரானோம்.

ஆனால், எங்கள் திருமண விண்ணப்பத்தின்பேரில் முடிவு எடுக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, நாங்கள் இருவரும் காத்திருந்தோம். 30 நாட்கள் முடிந்த பின்பும், எங்கள் திருமண விண்ணப்பத்தின் மீது சார்பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே எனது வருங்கால கணவர் ராகுல், விடுமுறையை நீட்டிக்க வழியில்லாமல் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால் திருமண பதிவு சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க அவரது சார்பில் எனக்கு முழு அதிகாரத்தை வழங்குவதாக பிரமாணப்பத்திரம் அளித்துள்ளார்.

வீடியோ காலில் திருமணம்: ஆகவே, நாங்கள் இருவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்ளவும், அந்த திருமணத்தை சிறப்பு சட்டத்தின்மூலம் பதிவு செய்யவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மனுதாரர்கள் தங்களின் திருமணத்தை நடத்த ஆன்லைன் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களின் திருமணத்தை வீடியோ காலில் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 3 சாட்சிகள் முன்னிலையில் மனுதாரர் தன் தரப்பிலும், ராகுல் தரப்பிலும் திருமண பதிவு புத்தகத்தில் கையெழுத்திடலாம். அதன்பின் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழை மணவளக்குறிச்சி சார்பதிவாளர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆணாக மாறிய பெண்ணை காதலித்த பெண் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details