தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மஞ்சள் ஆற்றின் தடுப்பணை விவகாரம்: பொதுப்பணித்துறை பதிலளிக்க உத்தரவு!

மதுரை: மஞ்சள் ஆற்றின் குறுக்கே இரு தடுப்பணைகளை கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai HC order to PWD

By

Published : Oct 23, 2019, 1:15 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், ஆதிமூலம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

அதில், "நிலக்கோட்டை தாலுகாவில் மஞ்சள் ஆற்றின் குறுக்கே குன்னுவராயன்கோட்டை, கணவாய்பட்டி கிராமங்களில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், 2018 செப்டம்பர் 19 தேதியில் அரசாணை ஒன்றை பிறப்பித்தார். மஞ்சளாறு அணை 1966ல் தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாய பாசனத்திற்காக கட்டப்பட்டது.

மஞ்சளாறு பழனி மலையில் உற்பத்தியாகி, வைகை ஆற்றில் இணைகிறது. மஞ்சளாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர், தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மஞ்சளாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு ஒரு போக சாகுபடிக்கு தவறாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில் பொதுப்பணித்துறையினர் கடந்த ஆண்டு செப்டம்பர் 19 பல்வேறு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அரசாணை பிறப்பித்தார். அதில் மஞ்சளாற்றின் குறுக்கே, குண்ணுவரங்கோட்டை கிராமத்தில் உச்சப்பட்டி அருகேயும் கணவாய்ப்பட்டி கிராமத்திலும் இரு தடுப்பணைகளை கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளாறு ஒரு வற்றாத ஜீவ நதி அல்ல. ஆகையால் தடுப்பணைகள் கட்டுவதால் பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இரு தடுப்பணைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டர் தொலைவே உள்ளதால் நிதியிழப்பு மட்டுமே ஏற்படும். ஆகவே மஞ்சள் ஆற்றின் குறுக்கே இரு தடுப்பணைகளை கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, இது குறித்து பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details