மதுரையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் காளிகாப்பன் பகுதியில் உள்ள பாட்டை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலை என்று வருவாய் ஆவணங்களில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே வழங்க மாவட்ட ஆட்சியர் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. சாலை என்று வகைப்படுத்தப்பட்ட நிலத்தை யாருக்கும் வழங்க முடியாது. எனவே, இங்கு வீட்டுமனைப்பட்டா பட்டா வழங்க தடை விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் கோரி வழக்கு தொடர்ந்திருந்தேன்.
அப்போது நீதிமன்றம் வீட்டுமனைப்பட்டா வழங்காமல் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த நிலத்தை வீட்டுமனைப்பட்டாவாக மாற்றும் நோக்குடன், சாலை என்பதை வகை மாற்றம் செய்து கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.முரளிசங்கர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:நில ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு