மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "நான் பிளஸ் 2 முடித்துவிட்டு இந்த வருடம் மருத்துவ படிப்பிற்கான தேசிய திறனாய்வு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதி இருந்தேன். அந்த தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருந்தேன்.
அதன்பின் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் OMR சீட் மற்றும் கேள்விக்கான அனைத்து பதில்களையும் தேர்வு முகமை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது. அதில் எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 564 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு சரியாக இருந்தது. ஆனால், கடந்த 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சதவிகித படி 48.8% கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் குளறுபடி உள்ளது. ஆகவே நான் எழுதிய நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். அதன்படி எனது பழைய மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய மதிப்பெண் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு இன்று வந்தது.
அப்போது நீதிபதி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் பெற முடியும் என்ற காரணத்தினால் மாணவியின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கின்றது. மாணவி தான் எழுதிய நீட் தேர்வின் விடைத்தாள் OMR சீட்டை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். அதற்கான நடவடிக்கைகளை தேர்வு முகமை ஏற்படுத்தித் தரவ வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் 35 விழுக்காடு மாணவர்கள் நீட்டில் தேர்ச்சி