தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், " 2019 நவம்பரில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சில மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 30 ஏக்கரிலான தென்காசியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலேயே புதிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான போதுமான இடம் இருந்தும், அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை 11 ஏக்கரில் கட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் அமைந்தால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படவும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்து, அங்கு புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட உத்தரவிட வேண்டும் ” எனக் கோரியிருந்தார்.