தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வழக்கு - இன்று தீர்ப்பு - தஞ்சை கோயில் குடமுழுக்கு விவகாரம்

மதுரை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மொழியில் குட முழுக்கு நடந்த வேண்டும் என்ற வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை காலையில் தீர்ப்பு வழங்குகிறது.

Thanjavur Big Temple consecration in Tamil
Thanjavur temple

By

Published : Jan 31, 2020, 7:58 AM IST

குடமுழுக்கு நடைபெறும் அன்று கருவறை மற்றும் குடமுழுக்கு நடைபெறும் அனைத்து இடங்களிலும் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து அறநிலையத் துறை சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்ததது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை பெரியகோயில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர், தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'ஆகமம் என்பது தமிழ் மொழிக்கானது. சமஸ்கிருதத்தில் அதற்கான பொருள் இல்லை. ஆனால் தமிழில் உண்டு. அதோடு ஆகமம் தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்பட்டுள்ளது. தமிழகம் தவிர பிற இடங்களில் இல்லை. ஆகம விதிகள் தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் பின்பற்றப்படுவதில்லை.

ஆங்கிலப் புத்தாண்டின் போது இரவு நேர பூஜைகள் நடப்பது, காலத்துக்கு ஏற்றார் போல மாற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் கடைசியாக சமஸ்கிருதத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்டாலும் அதில் மாற்றம் கொணர்ந்து தமிழில் நடத்தலாம். ஆகவே தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும்' என்றார்.

அதற்கு இந்து அறநிலையத் துறை சார்பில், யாகசாலையிலிருந்தே குடமுழுக்கு நிகழ்வு தொடங்கும். மகாபிசேகத்தின் போதும் திருமுறைகளைப் பாட ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சமஸ்கிருதத்தில் குடமுழுக்கை நடத்த வேண்டும் என இடைமனு தாக்கல் செய்த மைலாப்பூர் ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சமஸ்கிருதம் என்பது பேசும் மொழியல்ல. தேவமொழி. ஆகவே சமஸ்கிருதத்தில் தஞ்சை குடமுழுக்கு நிகழ்வை நடத்த உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.

அதேபோல் அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் குடமுழுக்கு நடக்கும் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், நந்தி மண்டபம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழில் வேதங்கள் மற்றும் அர்ச்சனைகள் நடத்தப்படும் என தகவல் தெரிவித்தனர். அதனையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

இதையடுத்து தஞ்சாவூர் கோயிலின் குடமுழுக்கு தொடர்பான இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு வெள்ளிக்கிழமை (இன்று) காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details