மதுரை: விரோனிகா மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருச்சிராப்பள்ளியில் 1963ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது மிகப்பெரிய அளவில் பொறியியல் சம்பந்தமான வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு 50,000 நபர்கள் வரை வேலை செய்து வருகின்றனர்.
பெல் நிறுவனத்தில் பிராணவாயு தயாரிக்கக் கூடிய 3 ஆலை செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் பிராணவாயுவை தயாரிக்கக்கூடிய திறன் கொண்டது. ஆனால் 2003ஆம் ஆண்டு முதல் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு அப்பகுதி செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.
இதேபோல், செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எல்.எல் பயோடெக் நிறுவனம் 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் பிராணவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பெல் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் பிராணவாயு தயாரிக்கும் பணியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் புனே,மற்றும் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசிகள் பல மாநிலங்களுக்கு தாமதமாக கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே செங்கல்பட்டில் இயங்கி வரும் எச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி எளிதாக சென்றடையும் என அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இது குறித்து அறிவிப்புகள் பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் பிராணவாயு தேவை எந்தளவு உள்ளது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
மேலும்,
- தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பிராணவாயு தேவை எந்த அளவு உள்ளது?
- தமிழ்நாட்டில் பிராணவாயு தயாரிக்கும் மையங்கள் எத்தனை செயல்படாமல் உள்ளது?
- செயல்படாமல் இருக்கும் தயாரிக்கும் மையங்களில், எத்தனை மையங்களை உடனடியாக செயல்படுத்த முடியும்?
என்று வினவிய நீதிபதிகள், செங்கல்பட்டு உள்ள எச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்