மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரையைச் சேர்ந்த கொண்டப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திண்டுக்கல் மாவட்டம் கருமலை ஆற்றின் நீரோடை, வேடசந்தூர் பகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு விவசாயத்திற்காக செல்கிறது. ஏற்கனவே, பல இடங்களில் சேதமடைந்து நீரோடைக்கு வரும் தண்ணீர், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இச்சூழலில் தற்போது தனியார் ஆலை சார்பில், சட்ட விரோதமாக நீரோடை ஆக்கிரமித்து சூரிய மின் தகடு பாதைக்கான மின் கம்பங்களை ஊன்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக கருமலை ஆற்றின் நீரோடை நடுவே அமைக்கப்படும் மின் கம்பங்களை அகற்றக் கோரி மனு அளித்துள்ளேன். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வேடச்சந்தூர் வட்டார வருவாய் அலுவலர்கள் சூரியதகடுகள் அமைக்கப் போடப்பட்ட மின் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், சூரிய மின் தகடுகள் பதிக்கும் மின் பாதைகளை அகற்ற, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என அறிக்கை செய்யப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து ஊன்றப்பட்ட மின் கம்பங்களை மாவட்ட நிர்வாகம் அகற்றி வருவதாக கூறியுள்ளது. எனவே, இதனை உறுதி செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மூன்று மாதத்திற்குள் மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.