தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லாக்-அப்பில் இளைஞர் கொலை? - சிசிடிவி பதிவை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு - Lock-Up Death

மதுரை: காவல் துறையினர் தாக்கியதில் ஓட்டுநர் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல் நிலைய சிசிடிவி பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த இளைஞரின் உடற்கூறாய்வை காணொலியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Madurai Lock up death

By

Published : Oct 25, 2019, 10:00 PM IST


மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த முத்துகருப்பன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"என் மகன் பாலமுருகன் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். கடத்தல் வழக்கில் பாலமுருகனை அவனியாபுரம் காவலர்கள் கைது செய்தனர். முன்னதாக பாலமுருகனை அவர்கள் சட்டவிரோதமாகக் காவலில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பாலமுருகனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து தகவல் தெரிந்து நாங்கள் சென்று பார்த்தபோது அவசர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவு இல்லாமலிருந்தார். அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ரமணி, சார்பு ஆய்வாளர் சக்தி மணிகண்டன், அண்ணாநகர் காவல் நிலைய சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பெத்துராஜ், காவல் ஆய்வாளர்கள் என் மகனை சட்டவிரோதமாகக் காவலில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நீதிபதிக்கு புகார் அனுப்பினேன். அவர் உத்தரவின் பேரில் 2018 அக்டோபர் 24இல் ஐந்தாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தனர். மாலையில் பாலமுருகன் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். என் மகன் உடற்கூறாய்வை தடயவியல் துறையைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் முன்னிலையில் மேற்கொள்ளவும், அதனை காணொலியில் பதிவு செய்யவும், சம்பவம் தொடர்பாக தலைமை குற்றவியல் நடுவர் விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும், அவனியாபுரம் காவல் நிலையத்தின் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 22 வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளைப் பாதுகாக்கவும், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அவனியாபுரம் காவல் நிலையத்தின் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 22 வரையிலான சிசிடிவி பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். உடற்கூறாய்வு காணொலியில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற ஒன்றாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: இப்படியும் ஓர் காதல்... கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details