வாசல்:
தமிழ்நாட்டின் தென்பகுதிகளை இணைக்கும் முக்கிய நகரமாக இருக்கும் மதுரை எப்போதும் பரபரப்பாகவே இருந்துவருகிறது. இந்த தூங்கா நகரத்தில், மதுரை தெற்கு, மத்திய மதுரை, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பொது தொகுதிகளும், தனி தொகுதியாக சோழவந்தானும் உள்ளன.
தொகுதிகள் வலம்:
உசிலம்பட்டி:
மதுரையை ஊர் மணக்க செய்யும் மல்லிகைப்பூ சாகுபடி, உசிலம்பட்டி தொகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் பெருமளவு நடைபெறுகிறது. உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியின் 40 ஆண்டு காலக்கோரிக்கையான 58 கிராம கால்வாய்த் திட்டப்பணிகள் அதிமுக அரசின் முயற்சி காரணமாக நிறைவடைந்தாலும், அதில் முழுமையான பயன் கிடைக்கவில்லை என்பதும், பெண்களுக்கான கல்வி வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளது என்பதும் அப்பகுதியில் நிலவும் குற்றச்சாட்டாக உள்ளது.
சேடபட்டி பகுதியில் அமையும் என அறிவிக்கப்பட்டிருந்த தொழிற்பேட்டை குறித்த எதிர்பார்ப்பு இன்றும் நீடிக்கிறது. அதற்கான எந்தப் பணியையும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி செய்யாதது அப்பகுதி மக்களிடம் வேதனையாக உள்ளது.
திருமங்கலம்:
புராணங்களின்படி மீனாட்சியின் திருமணத்திற்காக தாலி செய்ய தேர்வு செய்யப்பட்ட இடமென்பதால், இவ்வூர் திருமங்கலம். இத்தொகுதியில் அமைக்கப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்பட அதிமுக அழுத்தம் கொடுக்கவேண்டுமென்பது, தொகுதிவாசிகளின் விருப்பம். வைகையிலிருந்து பெறப்படும் நீர், திருமங்கலம் பிரதானக் கால்வாயில் விவசாயத்திற்காக வந்து சேர்வதற்கு, நீர்வரத்துக் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும், புதிய பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதும் தொகுதிவாசிகளின் கோரிக்கை ஆகும். சிவரக்கோட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அரசாணை பிறப்பிக்க உதவிய உள்ளூர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை விவசாயிகள் பாராட்டுகின்றனர்.
சோழவந்தான் (தனி):
வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள நகரம் சோழவந்தான். வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன சோழவந்தான் தொகுதியில் பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததும், விவசாயம் தவிர்த்து, ஆண்டு முழுவதும் வேறு வேலை வாய்ப்பின்மை நிலவுவதும், போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லாததும் சோழவந்தான் தொகுதியின் சோகங்களாக இன்னும் தொடர்கின்றன.
திருப்பரங்குன்றம்:
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தின் சரவணப்பொய்கை தூர்வாரப்பட வேண்டும்; கிரிவலப்பாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இத்தொகுதியின் பெரும்பாலான கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. நிலையூர் பகுதியில் நடைபெறும் கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்க சரியான விற்பனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். மல்லிகை, பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்கும் இத்தொகுதியில், அது தொடர்பான தொழில் வாய்ப்புகள், பண்டகசாலை வசதிகள் இல்லாதது பெருங்குறையாக உள்ளன.
மேலூர் :
மேலூர் தொகுதியில் முல்லைப் பெரியாறு நீரே விவசாயத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறது. கொட்டாம்பட்டி பகுதியில் போதுமான உயர் கல்வி நிலையங்கள் இல்லாததால் ஆர்வமிருந்தும் பெண் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் சிரமப்படுகின்றனர் . சலவைக்கற்கள் எடுப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தொகுதியிலும் வேலைவாய்ப்பின்மை பெரும்பிரச்னையாக உள்ளது.