தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறைச்சாலைகளில் சமூக சேவகர் பதவி நியமனம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

சமூக சேவகர் பதவி, உளவியலாளர் பதவிகளை தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைச்சாலை சீர்திருத்த பள்ளிகள், புதுக்கோட்டை மற்றும் அனைத்து சிறப்பு மகளிர் சிறைச்சாலைகளில் நியமனம் செய்ய கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Feb 2, 2022, 9:14 AM IST

மதுரை: சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த கே.ஆர். ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைகளில் மட்டும் சமூக சேவகர் பதவியில் ஆள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய சிறைச்சாலையில் சமூக சேவகர் பதவி காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் வேறு சிறைச்சாலைகளில் சமூக சேவகர் பதவி உருவாக்கப்படவில்லை.

சிறைச்சாலைகளில் சமூக சேவகர் பதவியில் இருக்கும் நபர்களுக்குப் பதவி உயர்வு கிடையாது. சமூக சேவகர் பதவியில் உள்ளவர்களுக்கு சரியான ஊக்கம் அளிக்கப்படுவது இல்லை.

பல கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் சிறை மற்றும் சீர்திருத்த சேவைத் துறையின்கீழ் உள்ள 142 சிறைச்சாலைகளில் 23 ஆயிரத்து 592 சிறைக் கைதிகள் இருப்பதற்கான வசதிகள் உள்ளன. தற்போது, 17 ஆயிரத்து 302 ஆண் கைதிகள், 741 பெண் கைதிகள் உள்ளனர். சிறைச் சாலைகளுக்கு எனப் பல்வேறு பதவிகள் நிரப்பப்பட்டு அதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஆனால் மத்திய சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரம் கைதிகளுக்கு ஒரு சமூக சேவகர் பதவி, ஒரு உளவியலாளர், ஒரு நல அலுவலர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்குப் பதவி உயர்வு கிடையாது. ரூ. 15,000 மட்டும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

சமூக சேவகர் பதவி, உளவியலாளர், நல அலுவலர் நியமிப்பதன் மூலம் கைதிகளின் மனநிலை, கைதிகளின் குடும்பத்துடனான தொடர்பு, மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழிவகைகள் ஆகியவை ஏற்படுத்த முடியும். சிறைக் கைதிகள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பது, சிறைக் கைதிகளை காவலர்கள் தாக்குவது போன்ற சம்பவங்கள் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

1983ஆம் ஆண்டு மத்திய சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த பள்ளிகளின் விதிகள் 14இன்படி சமூக சேவகர் பதவி, உளவியலாளர் நியமனம் செய்ய வேண்டும் என விதிகள் உள்ளன.

வழக்கு ஒத்திவைப்பு

இதன்படி, சமூக சேவகர் பதவி, உளவியலாளர் பதவிகளை தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைச்சாலை சீர்திருத்த பள்ளிகள், புதுக்கோட்டை மற்றும் அனைத்து சிறப்பு மகளிர் சிறைச்சாலைகளில் நியமனம் செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு உள் துறை கூடுதல் செயலர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறை இயக்குநர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - வழக்கு குறித்து விவரித்த துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details