தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணை அடிப்படையில் விடுதலையான இருவரை மீண்டும் கைது செய்ய உத்தரவு! - kalavasal murder case

கருணை அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு முன்பாக விடுதலை செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீண்டும் கொலை குற்றங்களில் ஈடுபட்டதால் அவர்களின் விடுதலை ரத்து செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Dec 9, 2021, 2:10 PM IST

மதுரை: காளவாசல் பகுதியைச் சேர்ந்த இளவரசி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், ”எனது கணவர் நாகேந்திரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த நவம்பர் 2020 அன்று திருச்சியில் என் சகோதரி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் புறப்பட்டோம். அப்போது எனது கணவரை உமாசங்கர் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக சந்திக்குமாறு தெரிவித்தார்.
இதையடுத்து, எனது கணவர் எங்களுடன் திருச்சிக்கு வரவில்லை. ஆகையால் எனது மகனை மட்டும் திருச்சிக்கு அழைத்துச் சென்றேன். அன்று இரவு எனது கணவரிடம் செல்போனில் பேசியபோது, உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டது.

தொடர்ந்து, என் கணவரை அவர்கள் கொடூரமாக கொன்றதாகவும், அவர்களை காவல் துறையினர் கைது செய்ததும் தெரியவந்தது. உமா சங்கரும், சாய் பிரசாத்தும் கடந்த 2005ஆம் ஆண்டில் குமரகுரு என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்ததால் அவர்களை தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்து, தமிழ்நாடு அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்துள்ளது. அவர்களின் விடுதலைக்குப் பின்பு தான் என் கணவரை கொலை செய்துள்ளனர்.

மேலும் சில கொலை, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மதுரை, தேனி மாவட்ட காவல் நிலையங்களில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள், தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுதலையாகும்பட்சத்தில், எதிர்காலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்ற சிறைத்துறையின் நிபந்தனைகளை மீறியுள்ளனர்.
இவர்கள் வெளியில் இருந்தால் மேலும் பல கொலைக்குற்றங்களில் ஈடுபடுவார்கள். எனவே, அவர்களை தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யவும், எங்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது அலி ஜின்னா ஆஜராகி, தண்டனைக் காலம் நிறைவடைவதற்கு முன்பான விடுதலை என்பது அரசு கருணையின் அடிப்படையில் 10 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது. இந்த விடுதலை என்பது தவறு செய்தவர்கள் தங்களை திருத்தி கொள்வதற்காக மட்டுமே.
ஆனால் இந்தக் கருணை அடிப்படையில் விடுதலை பெற்றவர்கள் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டால், அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது உடனடியாக அவர்களது விடுதலையை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், நீதிமன்றமும் கண்காணிக்கும்.
எனவே, கருணை அடிப்படையில் விடுதலை ஆனவர்கள் எவ்வித குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது என்றும் இந்த வழக்கில் குற்ற செயல்களில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட இருவரின் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை அரசு ரத்து செய்து விட்டது என்ற உத்தரவின் நகலையும் தாக்கல் செய்தார்.
இந்த அரசின் உத்தரவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குற்றவாளிகளை மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இணைந்து விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் தாய் மகள் மர்மமான முறையில் கொலை

ABOUT THE AUTHOR

...view details