சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த கலியன் (வயது 100). சுதந்திரப் போராட்ட தியாகியான இவர், கடந்த 1942இல் ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு அரசின் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெறுகிறார். மேலும், மத்திய அரசின் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்திருந்தார். தன்னுடன் சிறையிலிருந்த தியாகிகள் காளிமுத்தன், சாமி ஆகியோரின் சான்றிதழையும் இணைந்திருந்தார்.
மத்திய அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதில், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2014இல் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்தார்.
சிறையிலிருந்ததற்கு ஆதாரமாக முதன்மையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை எனக்கூறிக் கடந்த 2018இல் மத்திய அரசு அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதை எதிர்த்து தியாகி கலியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு செய்திருந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி மனுதாரருக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இவ்வுத்தரவை எதிர்த்து, மத்திய அரசின் உள்துறைச் செயலர் (தியாகிகள் பிரிவு) தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.