மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு என சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து மதுரை மாகாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், "நமது நாட்டில் 2.68 கோடி பேர் மன நலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இதில் பலர் நடக்க இயலாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆசிட் வீச்சு, விபத்துகள், இடிபாடுகளில் சிக்கியும் ஊனமுற்றவர்களாக மாறி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் உரிமைகள் பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இது போன்ற மாற்றுத்திறனாளிகள் சிலர் நீதிமன்றங்களுக்கு செல்லும் போது பல்வேறு சங்கடங்களை சந்திக்க வேண்டியுள்ளது.மேலும் பலர் தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களுக்கு சென்று வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை அரசிடம் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசு, 2016ஆம் ஆண்டில் மனநலச் சட்டத்தின் படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என விதிகளை இயற்றி இருந்தது.