மதுரை: இன்று (ஏப்.16) சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. பச்சை அங்கி, வெண் பட்டுடுத்தி, தங்கக் குதிரையில் கள்ளழகர் எழுந்தருளினார்.
கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார் வீரராகவ பெருமாள். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள். விமர்சையாக நடைபெற்றுவரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் புனித நீர் பீய்ச்சி அடிக்கையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
மேலும் 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியும், காயமடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் தேனியைச் சேர்ந் செல்வம் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'வெண்பட்டு பச்சை அங்கி அணிந்து, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்!'