மதுரை:மதுரை மத்திய சிறையில் கலவரத்தை ஏற்படுத்தி பொருள்களைச் சேதப்படுத்தியாக 21 கைதிகள் மீது வழக்குப்பதிந்து, காயமடைந்த ஒன்பது பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிறையில் பயன்படுத்தப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பறிமுதல்செய்யப்பட்டட்து.
மதுரை அரசரடி அருகே புதுஜெயில் ரோடு சாலையில் அமைந்துள்ள மதுரை மத்திய சிறையில் 1300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் சிறைக்குள் இருந்த சிறைவாசியான மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரை, மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியைச் சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்ற சிறைவாசி திடீரென சிறைக்குள் வைத்து தாக்கியுள்ளார்.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்
இதைனையடுத்து சிறைவாசி சுபாஷ்சந்திரபோஸை சிறைக் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைப் பார்த்த சிறைவாசிகள் சிலர் காவலர் சிறைவாசியைத் துன்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு சிறைவாசிகள் சிலர் திடீரென சிறை வளாகத்திற்குள் இருந்த பொருள்களைச் சேதப்படுத்தியும், சிறைச்சுவர் மீது ஏறி நின்று சாலைகளில் கற்களை வீசி எறிந்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சில சிறைவாசிகள் தங்களைத் தாங்களே பிளேடு, கண்ணாடிகளால் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் இது குறித்து சிறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சிறைவாசியான ஜெகன் தூண்டுதலின்பெயரில் சுபாஷ்சந்திரபோஸ் ஆதிநாரயாணனை முன்விரோதம் காரணமாகத் தாக்கியது தெரியவந்துள்ளது.