தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மதுபோதை இல்லாத தொகுதி என்பதே இலக்கு’ - மதுரை மத்தியத் தொகுதி மநீம வேட்பாளர் பேட்டி

”மதுபோதை இல்லாத மதுரை மத்தியத் தொகுதியை உருவாக்குவதே எனது இலட்சியம். நேர்மையான நிர்வாகத்தையும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவதும் எனது கடமை” என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பி.மணி ஈடிவி பாரத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

madurai central constituency mnm candidate mani interview
மதுரை மத்திய தொகுதி மநீம வேட்பாளர் பி. மணி நேர்காணல்

By

Published : Mar 30, 2021, 1:41 PM IST

மதுரையின் மையமமாகத் திகழ்கின்ற மதுரை மத்தியத் தொகுதியில் திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணியின் சார்பில் பசும்பொன் தேசியக் கழகத்தின் ஜோதி முத்துராமலிங்கம் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இத்தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக பி.மணி களம் காண்கிறார்.

இந்நிலையில், வழக்கமான வேட்பாளர்களைப் போல் வாகனங்களில் சென்று பரப்புரை மேற்கொள்ளாமல் தொகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இவர் வாக்கு சேகரித்து வருகிறார். பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு இடையில் மநீம வேட்பாளர் பி. மணி நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கினார். அப்போது அவர் பேசியவை பின்வருமாறு:

மக்கள் சேவகனாகத் தொண்டாற்றுவேன்

”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலின் வழியைப் பின்பற்றி ’நேர்மையான நிர்வாகம்’ என்பதை நாங்கள் முழக்கமாகக் கொண்டு களம் இறங்கியுள்ளோம். அதனால் தொகுதி முழுவதுமே எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நல்ல மக்கள் சேவகனாக இந்தத் தொகுதிக்கு தொண்டாற்றுவேன் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மதுரை, மத்தியத் தொகுதியை பொறுத்தவரை இதுவரை வென்றவர்கள் எவருமே தொகுதியை சரிவர கவனிக்கவில்லை என்பதை கண்கூடாகக் கண்டுணர்ந்தேன்.

ஒருபோதும் லஞ்சம் வாங்கமாட்டேன்

மதுபோதை மறுவாழ்வு மையம் உருவாக்குவேன்

பல்வேறு மதுபோதை சார்ந்த விசயங்கள் இங்குள்ள இளம் தலைமுறையினரை மிகவும் பாதித்துள்ளது. அவற்றையெல்லாம் அறவே ஒழித்து ’மதுபோதையற்ற தொகுதி’ என்ற நிலையை உருவாக்குவேன்.

மதுபோதை மறுவாழ்வு மையம் ஒன்றை அமைத்து, அவர்களுக்கு கவுன்சிலிங் செய்து பாதிக்கப்பட்ட நபர்களை அதிலிருந்து மீட்டெடுப்பேன்.

அடிப்படை வசதிகளில் இத்தொகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. கழிவுநீர் வழிந்தோட தரமான சாக்கடை வசதிகள் இல்லை. குடிநீரில் கழிவு நீரும் கலந்து செல்லும் அபாயநிலை உள்ளது. இவற்றை சரி செய்வேன் எனத் தொகுதி மக்களுக்கு உறுதி அளித்துள்ளேன்.

இளைஞர்களுக்கு மது போதை பற்றி விழிப்புணர் ஏற்படுத்துவேன்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையை ஒழிப்பேன்

இத்தொகுதியில் சுகாதாரப் பணி செய்யும் மாநகராட்சி ஊழியர்களுக்கு போதுமான உபகரணங்கள் வழங்கப்படாத நிலை உள்ளது. அதனால் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் குறித்த சிக்கல்கள் நிலவுகின்றன. அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வேன். மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் இழிநிலையை இந்தத் தொகுதியில் இனி முற்றிலுமாக ஒழிப்பேன்.

நேர்மை என்ற ஆயுதமும், லஞ்சம் வாங்கமாட்டோம் எனவும் துணிச்சலாக பிரகடனப்படுத்தியுள்ளோம். ஆகையால் திமுக, அதிமுக கூட்டணிகளை எதிர்கொள்வது எங்களுக்கொன்றும் சவால் இல்லை. மக்களை இதுவரை சந்திக்காத எம்எல்ஏக்களும் இந்தத் தொகுதியில் இருந்திருக்கின்றனர்.

வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

தற்போதுகூட மக்களிடம் இறங்கிச் சென்று வாக்கு கோராமல் செல்கின்ற வேட்பாளர்களும் உள்ளனர். ஆனால், நான் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறேன். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுகிறேன்.

சீரமைக்கப்படாத சாலைகள், குண்டும் குழியுமாக உள்ள தெருக்கள், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மக்களை வதைக்கும் திட்டங்கள் என மதுரை மத்தியத் தொகுதி மக்கள் கடும் இன்னல்களை நாள்தோறும் சந்தித்து வருகிறார்கள்.

தற்போது உள்ள எம்எல்ஏவும் சரி, ஆளுங்கட்சியினரும் சரி எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. மதுரை ராஜாமில் சாலையை எங்களது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுடன் இணைந்து சீரமைப்பு செய்துள்ளோம். எதையும் எதிர்பார்த்து நாங்கள் செய்யவில்லை. அந்த சேவைக்காகவே கமல் என்னை இந்தத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

70 சதவிகிதம் மக்களை நேரில் சந்தித்துள்ளேன்

இதுவரை யாரும் பார்க்காத சட்டப்பேரவை உறுப்பினராக இந்தத் தொகுதியில் நான் செயல்படுவேன். மதுரை மத்தியத் தொகுதியின் வெற்றி வேட்பாளரே நான்தான்.

பரப்புரையில் மக்கள் தருகின்ற ஆதரவு நானே எதிர்பார்க்காத ஒன்று. தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து தொகுதியின் வளர்ச்சிக்கு வித்திடுவேன்” என்றார்.

இதையும் படிங்க: ’துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்’ - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details