மதுரை:புதுக்கோட்டை, நடிவிக்கோட்டை கிராமத்தில் 2 மாதங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நடிவிக்கோட்டை கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்கக்கோரி, அக்கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நடிவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தங்கள் கிராமத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாத காரணத்தால், விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக முறையிட்டு வருவதாகவும், 2021ஆம் ஆண்டு தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. ஆகவே, நடிவிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "2 மாதங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிவிக்கோட்டை கிராமத்தில் 2 மாதங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:ஸ்டெம் துறைகளில் சிறந்து விளக்கும் பெண்களை கௌரவிக்க திட்டமிட்ட சென்னை ஐஐடி!