தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றன. இதையடுத்து, வாக்கும் எண்ணும் பணி நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், மதுரை மக்களவை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்ற மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
பின்னர் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 14 மேசைகள் அமைப்பு, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி நிலவரமும் செயலி வழியே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வரும். அதன் பின்னர் ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையில் எந்தத் தவறும் நிகழக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 600 பேரும், பாதுகாப்புப் பணியில் 1000 காவல் துறையினரும் ஈடுபட உள்ளனர். அஞ்சல் வாக்குகள் எண்ண ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நான்கு மேசைகள் அமைக்கப்படும்" என தெரிவித்தார்.