மதுரையில் 14ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது அதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் பேசுகையில், "கடந்த 42 ஆண்டுகளாகப் புத்தகக் கண்காட்சியை நாங்கள் நடத்திவருகிறோம். மதுரையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளனர்.
அதேபோன்று இந்த முறையும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு சுமார் 250 அரங்குகள் இடம்பெற்றிருந்தன. இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் இடம்பெறவுள்ளன. மக்களிடையே வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தவும், அதை மேம்படுத்தவும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களை ஒரு அறிவுத்திருவிழாவாகவே தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்திவருகிறது.
தற்போது நடைபெறவுள்ள 14ஆவது மதுரை புத்தகத் திருவிழாவில், பல்துறை சார்ந்த 50 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. அதுமட்டுமன்றி நாள்தோறும் புத்தக வெளியீட்டு விழாக்களும், பள்ளி மாணவ மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகப் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் பள்ளி கல்லூரி மாணவ - மாணவியர் வந்து பார்வையிட்டுச் செல்வதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அதேபோன்று அரங்கிற்குள் தண்ணீர் கழிப்பறை வசதிகள் அனைத்தும் தேவையான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.