மதுரை: திசையன்விளை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ஜெயக்குமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துக்குமார், பிரேம்குமார் மற்றும் தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிலிருந்து 9 பேர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அதிமுகவின் கூட்டணிக்கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி உத்தரவு
மொத்தமாக உள்ள 18 வார்டுகளில், 10 வார்டுகள் அதிமுக வசம் உள்ளன. இதனால், திமுகவினர் சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் பதவியைக் கைப்பற்றுவதற்காக, திமுகவைச் சேர்ந்த சிலர் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை மிரட்டி வருகின்றனர். எனவே, திசையன்விளை பேரூராட்சி சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் பதவிக்கான தேர்தல் அமைதியான முறையில் நடத்தத் தகுந்த காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, மார்ச் 3ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அதிமுக கவுன்சிலர்கள் 9 நபருக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்கி அமைதியான முறையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:'உக்ரைனிலுள்ள தமிழர்களை மீட்க திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உட்பட 4 பேர் வெளிநாடு பயணம்'