தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வழக்கு - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் - high court

மதுரை: தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிடக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

high court

By

Published : Jul 18, 2019, 10:34 PM IST

மதுரை சோனை நகரைச் சேர்ந்த பகவத்சிங் உயர் நீதிமன்றக் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசியலமைப்பு சட்ட எட்டாவது அட்டவணையின்படி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன. 2019 தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அரசால் மே 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக சரியான முடிவெடுப்பது மாணவர்களின் நலன் சார்ந்து மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் முக்கியமானது. அது தொடர்பான கருத்தை முன்வைக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. மேலும் தேசிய கல்விக்கொள்கை எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை உற்று நோக்குவது மிக முக்கியமானது.

ஆகவே அது குறித்து பெருமளவில் விவாதிக்கப்பட வேண்டும். பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள் குறித்து அறிந்தால் மட்டுமே முறையாக கருத்துக்களை முன்வைக்க இயலும். அதற்கு தேசிய கல்விக்கொள்கையின் வரைவானது அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிடப்படுவது அவசியம். அப்போதுதான் பெரும்பாலானவர்கள் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து சரியான முடிவெடுக்க இயலும்.

பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உள்ள நம் நாட்டில் பல நேரங்களில் பன்மொழித் தன்மையை பாதுகாக்க தவறும் நிலை உருவாகிறது. ஒரு மொழி அழியும்போது அதனோடு சேர்ந்து இலக்கிய, கலாசார மரபும் அழிகின்றன. எனவே இந்தியாவின் அடையாளமான பன்மொழித்தன்மையை பாதுகாப்பது அவசியம்.

வெளிப்படையான கருத்துக்கேட்பு நடைபெற்றால், குறைகளைக் களைந்து வெற்றிகரமாக செயல்படுத்த வாய்ப்பாக அமையும். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருங்கிணைத்து எடுக்கப்படும் முடிவு தொடர்பான நடவடிக்கைகள், அதன்
உரிமைகள் பொறுப்புகள் , தேவைப்படும் காலம், எதிர்பார்க்கப்படும் விளைவு போன்றவை அனைவரும் அறியும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். இவற்றில் தவறுவது, அரசியலமைப்புச் சட்டம் விதி 29,30, 14,21 ஆகியவற்றை மீறுவது போலாகும்.

இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையின் வரைவானது ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. இது பிறமொழி பேசும் மக்களை ஒதுக்குவது போலாகும். ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தேசிய கல்விக்கொள்கையின் வரைவை வெளியிடும் வரை தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து, அது தொடர்பாக வெளிப்படையான பொதுமக்கள் கருத்துக் கேட்பினை நடத்தி முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details