மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியில் உள்ளது, வஉசி ஆட்டோ நிலையம். தங்களுக்கென உள்ள சொந்த மற்றும் வாடகை ஆட்டோக்களை வைத்து, இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் செய்து வருகின்றனர். அவர்களில் குருராஜூம் அன்பு நாதனும் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் கரோனா முதல் அலையின் போதே அவசரத் தேவைக்காக மக்களுக்கு இலவச ஆட்டோ சேவையை வழங்கி, அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றனர். வெளியே தெரியாமல் இருந்த இந்தப் பணி தற்போது கரோனா இரண்டாவது அலையில் மேற்கொண்ட சேவை பணியின்போது தெரியத் தொடங்கியது. இந்தப் பணி சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவரையும் பாராட்டி செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தார்.
'பிரசவத்திற்கு மட்டுமல்ல... கரோனா நோயாளிகளுக்கும் ஆட்டோ இலவசம்' பணம் எங்களுக்கு முக்கியமில்லை:
ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக துடிப்புமிக்க அந்த ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்தோம். வஉசி ஆட்டோ நிலையத்தில் அடுத்து வரும் மருத்துவ உதவிக்காகவும் அவசரத் தேவைக்காகவும் 2 ஆட்டோக்களும் காத்திருந்தன. அப்போது நம்மிடம் பேசிய அன்புநாதன், "எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒருங்கிணைந்து கடந்த கரோனா பேரிடர் காலத்தின்போதே இந்த சேவையில் இறங்கினோம். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும்போது மக்களின் சமூக இடைவெளியை உறுதி செய்தோம். கூட்டத்தை ஒழுங்குபடுத்தினோம். ஊனமுற்ற நபர்களுக்கும் சேவையாற்றினோம். தற்போது இரண்டாவது அலையில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் இப்பகுதியின் காவல் துறை துணை ஆணையர் சூரத் குமார் ஆகியோரின் அனுமதியோடு, எங்கள் இலவச ஆட்டோ சேவையைத் தொடங்கினோம்" என்றார்.
நண்பர்கள் அன்பு நாதன், குருராஜ் மேலும் பேசிய அன்புநாதன், "நாங்கள் அழைத்துச் சென்ற பெரும்பாலான நபர்கள் குணமான பிறகும் கூட மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்ல எங்களைத்தான் அழைக்கின்றனர். நாங்கள் உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று வீட்டில் விடும்போது எங்களுக்குப் பணம் கொடுக்க முயல்கின்றனர். நாங்கள் கண்டிப்பாக மறுத்து விடுகிறோம்' என்று பெருமையுடன் தெரிவித்தார்.
மக்களுக்கான சேவைதான் இவர்களுக்கான மகிழ்ச்சி
வேதாத்திரி மகரிஷியின் ஆசிரமத்தில் யோகா பயின்று இருக்கின்ற காரணத்தால், தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள பல்வேறு நபர்களுக்கு மூச்சுப் பயிற்சியும் யோகா பயிற்சியும் கட்டணம் பெற்றுக் கொள்ளாமல் வழங்குவதை கடமையாகச் செய்து வருகிறார், அன்புநாதன். உதவி கேட்டு வருபவர்களிடம் எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் அவர்களுக்கான மருத்துவ சேவையை உடனடியாக மேற்கொள்கின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அவர்களது உயிரைக் காக்க தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துப் பணியாற்றுகின்றனர், அன்புநாதனும் குருராஜூம்.
தன்னார்வலர்களாக செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து சக ஓட்டுநர் குருராஜ் கூறுகையில், "இதனை நாங்கள் வெறும் சேவையாக மட்டுமன்றி எங்களின் கடமையாக மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிக்கு எங்களை ஊக்குவித்த மதுரை மாவட்ட ஆட்சியர் காவல் துறை துணை ஆணையருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். மதுரையிலுள்ள தன்னார்வலர் குழுவில் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். இங்கு ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்றப் பணியை செய்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்படும் மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல எங்களது ஆட்டோக்களை இலவசமாக அனுமதிக்கிறோம். என்னுடன் இணைந்து பணி செய்யும் நண்பர் அன்புநாதன் இந்த சேவையில் மிகுந்த அக்கறை காட்டுகிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவரது சேவையையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்" என்றார்.
மறைந்த கர்ப்பிணி மருத்துவர் எங்களுக்கான உத்வேகம்
குருராஜூம் அன்புநாதனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை பாராட்டியதை மிகப் பெருமையாக கருதுகின்றனர். இது தங்களது சேவைக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிப்பதாகக் கூறுகின்றனர். அண்மையில் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த, மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா இந்த இளைஞர்களோடு இணைந்துதான் பணி செய்திருக்கிறார் என்பது உலகம் அறியாத தகவல்.
நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் இன்முகம் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி, தன்னுடைய மருத்துவ தொழிலை சேவையெனக் கருதி பணியாற்றியவர், மருத்துவர் சண்முகப்பிரியா. எங்களது ஆட்டோவில் அமர்ந்து தான் நிறைய இடங்களுக்குச் சென்று கரோனா குறித்து பரப்புரை மேற்கொண்டார். ஒரு சில வாரங்களில் நடக்கவிருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் கூட நீங்கள் எல்லாம் வரவேண்டும் என எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து இப்போதும் வருந்துகிறோம் என்கிறார்கள், குருராஜூம் அன்புநாதனும்...
மகத்தான சேவையாற்றும் அன்புநாதன், குருராஜ் வரும் ஞாயிறு அன்று ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண உதவி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. ஆகையால், அதில் பொதுமக்களுக்கு எந்த வகையில் உதவி செய்யலாம் என இந்த ஆட்டோ நண்பர்கள் தற்போது ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். சேவை என்பது மானுடத்தின் மகத்துவம். அதனை சரியான முறையில் உரிய நபர்களுக்கு செய்வதுதான் ஆகப்பெரும் உன்னதம். அந்த உன்னதத்தை மேற்கொள்ளும் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மகோன்னதமானவர்கள்தான்...