சென்னை:ஆகஸ்ட் 1ஆம் தேதி மதுரையில் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசும்பால் பாக்கெட்டுகள் குளிர்நிலை சரியில்லாத காரணத்தாலும், தரத்தை கண்காணிக்காமல் பால் பண்ணையில் இருந்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாலும் அவை கெட்டுப்போனதாக பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
கெட்டுப்போன பால்
நேற்று (ஆகஸ்ட் 21) காலை ஆவின் பசும் பால் பாக்கெட்டுகளை பால் முகவர்களிடம் இருந்து வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் பால் கெட்டுப் போனதால் அதனை உடனடியாக மாற்றித் தரக் கோரி பால் முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இனிமேல் எங்களுக்கு ஆவின் பால் வேண்டாம் எனவும், மாதாந்திர அட்டைக்கு செலுத்திய முன்பணத்தைத் திரும்பி தருமாறும் கூறி, சண்டையிட்ட நிகழ்வு மதுரை மாநகர் முழுவதும் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் இன்றும் (ஆகஸ்ட் 22) பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் பாக்கெட்டுகள் காலையிலேயே கெட்டுப் போனதாகக் கூறி, பால் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் கெட்டுப் போன பாலினை காய்ச்சிய, பால் சட்டியோடு கொண்டு வந்து மாற்றித் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பால் முகவர்களுக்கு இழப்பு
அதனால் ஆவின் பசும் பால் பாக்கெட்டுகள் வாங்கிச் சென்று, பால் கெட்டுப் போன நுகர்வோருக்கு அதனை மாற்றித் தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் பால் முகவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை ஆவின் அலுவலர்கள் கவனத்திற்கு நேற்றைய (ஆகஸ்ட் 21) தினமே கொண்டு சென்றும், அவர்கள் பால் முகவர்களின் புகாருக்கு செவிமடுத்ததாக இல்லை.
பால் முகவர்களுக்கு கெட்டுப் போன பாலுக்குரிய இழப்பீடை வழங்குவதாகவும் இல்லை என முகவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆவின் பாலைத் தவிர்க்கும் மக்கள்
"ஆவின் நிர்வாகம் பால் கெட்டுப் போனதற்குரிய இழப்பை ஈடுசெய்ய முன்வராததாலும், மதுரையில் தொடர்ந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போவதாலும், பெரும்பாலான நுகர்வோர் 'ஆவின் பாலே இனிமேல் வேண்டாம்' எனப் புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதன் காரணமாக பால் முகவர்களும் ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்" என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர், சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
எனவே, தரமற்ற, குளிர் நிலை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததோடு, பால் கெட்டுப் போக காரணமாக மெத்தனமாக இருந்து ஆவின் பால் விநியோகம் செய்த அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் இது போன்று நிகழாவண்ணம் துரிதமாக செயல்படவும், கெட்டுப் போன ஆவின் பாலுக்குரிய இழப்பீடை பால் முகவர்களுக்கு ஆவின் நிர்வாகம் தாமதமின்றி வழங்கிடவும் ஆவின் நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.